Thanks for the original author (Sri N C Siddharth) and sri balshank
--------------------------------------------------------------------------------
சுந்தர காண்டம் முழுவதும் சொன்ன பலன்
சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார் இதனை சுகம் தரும் சொர்க்கம் என்று கருத்தினில் கொள்வர்.
"கண்டேன் சீதையை" என்று காகுஸ்தனிடம் சொன்ன கருணை மிகு ஸ்ரீராமபக்த ஆஞ்சநேயர் பெருமை இது
அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே ஆயத்தமாகி நின்றான்.
ராமபாணம் போல் ராட்சசன் மனை நோக்கி இராஜ கம்பீரத்துடன் சென்றான்.
அங்கதனும் ஜாம்பவானும் அனைத்து வானரங்களும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே.
வானவர்கள் தானவர்கள் வருணாதி தேவர்கள் வழியெல்லாம் கூடிநின்று பூமாரி பொழிந்தனரே.
மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து சுரசையை வெற்றி கொண்டு ஸிம்ஹிகையை ஹிம்சை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தைத் தாண்டியே இலங்கை சேர்ந்தான்
இடக்காகப் பேசிய இலங்கை தேவதயை இடக்கையால் தண்டித்தவன் இதயத்தைக் கலக்கினான்
அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தைக் கண்டான்
சிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனை தியானம் செய்யும் சீதாப்பிராட்டியை� �் கண்டு சித்தம் கலங்கினான்
இராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட, வைதேகி கலங்கிட வந்தான் துயர் துடைக்க கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லிச் சூடாமணியைப் பெற்றுக் கொண்டான்
சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கண்டு அரக்கர் மேல் கோபம் கொண்டு அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்
பிரம்மாஸ்திரத்தி� �ால் பிணைக்கப்பட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் பெயர் சொல்ல, வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான்
வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகர்
அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான்
அன்னையைக் கண்டு விட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்
ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர் கை கூப்பி "கண்டேன் சீதையை" என்றான்
வைதேகி வாய்மொழியை அடையாளமாய்க் கூறி சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியை அளித்தான்
மனம் கனிந்து மாருதியை மார்போடு அனைத்து ஸ்ரீராமர் வைதேகியை சிறை மீட்க மறுகணம் சித்தமானார்
ஆழ்கடலில் அற்புதமாய் அணைகட்டி படைகள் சூழ அனுமானும் இலக்குவனும் உடன் வர புறப்பட்டார்
அழித்திட்டார் ராவணனை! ஒழித்திட்டார் அதர்மத்தை!
அன்னை சீதா தேவியை சிறை மீட்டு அடைந்திட்டார்
அயோத்தி சென்ற ஸ்ரீராமர் அகிலம் புகழ் ஆட்சி செய்தார்
அவரை சரண் அடைந்தோர்க்கு அவர் அருள் என்றும் உண்டு
எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனையோ அங்கே அங்கே சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் பரிபூர்ண பக்தனே!
ஸ்ரீ ஆஞ்சநேயனே! உன்னைப் பணிகின்றோம்! பன்முறை உன்னைப் பணிகின்றோம்! பன்முறை உன்னைப் பணிகின்றோம்!
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
No comments:
Post a Comment